அமெரிக்கா, ஈரான் போர் நீடிக்குமென சர்வதேச சமூகம் அச்சம்
அமெரிக்காவுடன் நிலவும் மோதல்களை நிறுத்துவது தொடர்பாகக் கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினால், ஈரானும் அதற்குரிய முறையில் பதிலளிக்கும் என ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இருப்பினும், ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளதால் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
ஜூலை மாத பிற்பகுதிக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே முதன்முறையாக நேரடித் தாக்குதல்கள் பரிமாறப்பட்டதாலும், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறிய இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளியான அறிக்கைகளைத் தொடர்ந்தும், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.
ஆறு மாதங்களாக நீடிக்கும் இந்த மோதல் பொருளாதார ரீதியிலான முட்டுக்கட்டையாக மாறியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானின் லாராக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இரு தரப்பும் மீண்டும் ஒரு முழு அளவிலான போரை விரும்பவில்லை என்றாலும், மேலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் பதிலடி கொடுப்போம் என்ற அவர்களின் உறுதிகள், தடைகள், முற்றுகைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் மூலம் நடத்தப்பட்டு வந்த இந்த மோதல் எவ்வளவு விரைவாக மீண்டும் இராணுவ நடவடிக்கையாக மாறக்கூடும் என்பதை உணர்த்துகின்றன.
போர் தொடரும் என்ற அச்சத்தில் சர்வதேச சமூகம்
ஜூன் மாதத்தில் இரு தரப்பாலும் கையெழுத்திடப்பட்டு, பின்னர் முறிந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) நிபந்தனைகளை வோஷிங்டன் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியே தடையற்ற கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என டெஹ்ரான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்த அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், பல கடினமான பிரச்சினைகளைத் தள்ளிப்போட்டதுடன் 60 நாள் விரிவான பேச்சுவார்த்தைக் காலத்திற்கு வழிவகுத்தது. எனினும், அந்த காலக்கட்டம் எவ்வித மேலதிக உடன்பாடும் இன்றி நிறைவடைந்தது.
ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகக் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கிற்குச் சென்றிருந்த ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் உரையாற்றுகையில், “புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது வாக்குறுதிகளுக்குத் திரும்பினால், ஈரானிய இஸ்லாமியக் குடியரசும் உடனடியாக அதற்குரிய முறையில் பதிலளிக்கும் என்பதை நான் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
போர் என்பது எவரது நலனுக்கும் உகந்ததல்ல என்றும், பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு டெஹ்ரான் இன்னும் தயாராகவே உள்ளது என்றும் அவர் திங்கள்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு பெரிய முன்னேற்றமும் ஏற்படாத நிலையிலும், இந்த வாரம் அதிகரித்துள்ள பதற்றங்களினாலும், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்திப் பகுதியிலிருந்து எண்ணெய் விநியோகம் தடைபடுமோ என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. இதன் காரணமாக பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலைகள் செவ்வாய்க்கிழமை மேலும் 1.3% உயர்ந்துள்ளன.
“அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இந்த பரஸ்பர ஏவுகணைத் தாக்குதல்கள், இது ஒரு முடிவில்லாத போராக இல்லாவிட்டாலும், நீண்டகாலத்திற்குத் தொடரும் ஒன்று என நம்புபவர்களின் கூற்றை உறுதிப்படுத்துகின்றன” என PVM பகுப்பாய்வாளர் ஜான் எவன்ஸ் தெரிவித்துள்ளார்.




