இந்திய நிதியை வடக்கில் எவ்வாறு பயன்படுத்தபோகின்றது அரசு?
“காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திகளுக்காக இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும், அந்நிதி இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்நிதியைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்ததாவது:
“நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்படாத சூழ்நிலையை உருவாக்குவதே நாம் செய்ய வேண்டிய பிரதான காரியமாகும். குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூவின மக்களும் ஒன்றாக வாழ்கின்றனர். அம்மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக இந்தியாவுடன் 2025 ஏப்ரல் மாதம் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
வடக்கில் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா நிதியுதவி வழங்கிய போதிலும், அந்நிதி இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
நமது நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில், இந்திய ஒப்பந்தங்களை வலுப்படுத்தி, அவற்றை முறையாக அமுல்படுத்தி வட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்பப் போகிறோம்? மீண்டும் போர் சூழல் உருவாகாமல் இருக்க அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்ன?” என்று அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பினார்.





