மக்களின் போராட்ட உரிமையை அரசு பறிக்கவில்லை
மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
அரசு ஜனநாயக வழியில் முன்னோக்கிச் செல்வதற்கு இத்தகைய ஆரோக்கியமான விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் நீதித்துறையைப் பலப்படுத்தவுமே மக்கள் தெளிவான ஆணையை வழங்கினர். கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகளால் பாதிக்கப்பட்டிருந்த நீதித்துறை, பொலிஸ் மற்றும் அரச நிறுவனங்களில் தற்போதைய அரசு அரசியல் தலையீடுகளை முற்றிலும் நிறுத்தியுள்ளது.
காணி வழக்குகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இழுபறியாக இருப்பதும், சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தாமதமாவதும் முறைப்பாட்டாளர்களையும் எதிராளிகளையும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றது.
தேங்கிக் கிடக்கும் சுமார் 11 இலட்சம் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர புதிய நீதிமன்றங்களை அமைத்தல், புதிய நீதிபதிகளை நியமித்தல் மற்றும் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதி மட்டுமேயாகும். இது அவசர முடிவு அல்ல, இதற்கு முன் அரசமைப்புத் திருத்தக் குழுக்களில் விமர்சகர்களாலும் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
நீதிமன்றங்களை டிஜிட்டல்மயமாக்குதல், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் புதிய அதிகாரிகளையும் உபகரணங்களையும் வழங்குதல் போன்றன முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், பொலிஸாருக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அரசியல் தலையீடின்றி சுதந்திரமாகச் செயற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்போது மாறுபட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் எழுவது இயல்பானது. மக்களின் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் அரசு கவனித்து, அவற்றை மதிப்பாய்வு செய்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கின்றது.” – என்றார்.




