பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: Uber சாரதியின் குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்தது ஆஸ்திரேலியா
பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக, ‘ஊபர்’ (Uber) நிறுவனத்தின் முன்னாள் ஓட்டுநருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிராஸ்பெக்ட் (Prospect) பகுதியைச் சேர்ந்த முஹம்மது உஸைர் ஏசான் (35) Muhammad Uzair Ehsan என்பவருக்கு எதிராக, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, இரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நீதிபதி ரோட்ரிக் ஜென்சன் தீர்ப்பளித்திருந்தார்.
இன்று அடிலெய்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி ஜென்சன், குற்றவாளி தனது தவறுக்கு எந்தவித மனவருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும், குற்றவாளி என்ற தீர்ப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட பெண் மதுபோதையில், பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திய ஓட்டுநர், அப்பெண்ணின் வீட்டிற்கு முன்னால் வைத்து இருமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
“குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்ற பொறுப்புணர்வுடன், பாதுகாப்பாக வீடு சேரவே அப்பெண் ஊபர் வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், ஓட்டுநரின் இந்தச் செயலால் அவர் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளார்” என நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், குற்றவாளி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வழக்கை எதிர் கொண்டதால், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்ற விசாரணையின் போது மீண்டும் ஒருமுறை மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருந்தது என்றும், இந்த சம்பவம் தனக்கு மீண்டும் ஒருமுறை பாலியல் அத்துமீறல் நடந்தது போன்ற அதிர்ச்சியை அளித்ததாக அப்பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் மனநல ஆலோசனை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வேலை இழப்பு காரணமாக ஆயிரக்கணக்கான டாலர்களைச் செலவிட்டுள்ளார்.
இக்குற்றவாளி மேல்முறையீடு செய்திருந்ததால் தண்டனை தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவருக்கு 8 மாதங்கள் பிணையில் வரமுடியாத காலப்பகுதியுடன் (Non-parole period) மொத்தம் 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையாளராக (Permanent resident) வசித்து வந்த இவரது குடியுரிமை விண்ணப்பம், இந்த குற்றச்செயலால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு டாக்ஸி மற்றும் ஊபர் ஓட்டுநர்களுக்கு உள்ளது என்றும், பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ஓட்டுநர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவது பொது நலனுக்கு அத்தியாவசியமானது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளியான ஏசான் தமது தளத்தைப் பயன்படுத்துவதிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக ஊபர் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




