மகாராஷ்டிராவில் மகளிர் மருத்துவமனையில் தீவிபத்து – 03 பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பு
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 03 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள NICU-வில் இருந்த வென்டிலேட்டர் திடீரென வெடித்ததைத் தொடர்ந்து, தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது, NICU-வில் சுமார் 39 பச்சிளங்குழந்தைகள் இருந்தன.
பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக குழந்தைகளை அந்தப் பிரிவிலிருந்து வெளியேற்றத் தொடங்கினர்.
குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பறிதாபமாக மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆறு பச்சிளங்குழந்தைகள் மேலதிக சிகிச்சைக்காக உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதுடன், அவர்களின் உடல்நிலை குறித்து தெளிவாக தெரியவில்லை.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்த மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




