ஐ.நா. கூட்டத்தொடர் செப்டம்பர் 22 ஆரம்பம்: இலங்கை சார்பில் விஜித ஹேரத் பங்கேற்பு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
ஐ.நா. பொதுச்சபையின் 81-ஆவது அமர்வின் உயர்மட்ட விவாதம் செப்டம்பர் 22 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இதில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதில் கலந்துகொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் சார்பில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச்சபையில் இலங்கை பிரதிநிதி உரையாற்றுவதற்காகச் செப்டம்பர் 26-ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. தலைமைச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசின் பதவிக்காலம் டிசம்பர் 31-ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், நடைபெறவுள்ள இந்த ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.




