கானாவின் இரும்புக்கோட்டை தடுப்பாட்டம் – இங்கிலாந்துக்கு ஏமாற்றம்
உலகக் கோப்பையின் Group L பிரிவின் இரண்டாவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணி கானாவின் பலத்த தடுப்பாட்டத்தை உடைக்க முடியாமல் திணறியது.
இதனால் நேற்று நடைபெற்ற இப்போட்டி 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்த முடிவு இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ள போதிலும், தங்களது முதல் போட்டியில் குரோஷியாவை 4-2 என வீழ்த்தியிருந்த இங்கிலாந்து அணிக்கு இது பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது.
தங்களது முதல் போட்டியில் பனாமாவுக்கு எதிராகக் கடைசி நிமிடத்தில் 1-0 என வெற்றி பெற்றிருந்த கானா அணி, ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்தின் அதிரடி ஆட்ட முறியடிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு களம் கண்டது.
தொடர்ந்து பெய்த தூறலுக்கு மத்தியில், முதற்பாதியில் பந்து 80 சதவீதம் இங்கிலாந்து அணியின் வசம் (Possession) இருந்தபோதிலும், அவர்களால் பெரிய அளவில் கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் (Harry Kane) அல்லது பிற வீரர்கள் கோல் அடிக்கும் எல்லைக்குள் நுழையும் போதெல்லாம், கானா வீரர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு தடுத்தனர்.
ஆட்டத்தின் முட்டுக்கட்டையை உடைப்பதற்காகத் துஹெல் , 65-வது நிமிடத்தில் புகாயோ சாகா மற்றும் நிகோ ஓ’ரெய்லி ஆகியோரைக் களம் இறக்கினார்.
அடுத்த 10 நிமிடங்களுக்குள் மார்கன் ரோஜர்ஸ் மற்றும் எபெரெச்சி எஸே ஆகியோரையும், இறுதியாக மார்கஸ் ராஷ்ஃபோர்டையும் மாற்று வீரர்களாக மைதானத்திற்குள் அனுப்பினார்.
மறுபுறம், பனாமாவுக்கு எதிராகக் கடைசி நொடிகளில் கோல் அடித்த கானா அணி, இப்போதும் அண்டோயின் செமென்யோ மற்றும் மாற்று வீரர் பிரின்ஸ் குவாபெனா அடு ஆகியோரின் வேகத்தைப் பயன்படுத்தி, இங்கிலாந்தை நோக்கி எதிர்த்தாக்குதல் (Counter-attack) நடத்த அச்சுறுத்தியது.
இருப்பினும், ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்குக் கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு கைநழுவியது.
ஓ’ரெய்லி தலையால் முட்டிய பந்து (Header) கோல் கம்பத்தின் குறுக்குக் கம்பியில் (Bar) பட்டுத் திரும்ப, அதை மீண்டெடுத்து ஹாரி கேன் அடித்த ஷாட் கம்பத்திற்கு மேல் பறந்தது.
இதுகுறித்து கேப்டன் ஹாரி கேன் கூறுகையில்,
“என்னால் பந்தைச் சரியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொதுவாக இத்தகைய வாய்ப்புகளை நான் கோலாக மாற்றிவிடுவேன்.
ஆனால், ஒரு ஸ்ட்ரைக்கராக எல்லாப் பந்துகளும் கோலாக மாறிவிடாது என்பதை நான் அறிவேன், எனவே இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்றார்.
கானா அணியின் பயிற்சியாளர் குயிரோஸ், தனது திட்டத்தை கச்சிதமாகச் செயல்படுத்தி இங்கிலாந்தை முடக்கியதற்காகத் தன் வீரர்களைப் பாராட்டினார்.
முக்கியத் தொடர்களில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது குரூப் போட்டியைச் சமன் செய்வது இது தொடர்ந்து நான்காவது முறையாகும்.
இப்பிரிவில் தலா பூஜ்ஜிய புள்ளிகளுடன் உள்ள குரோஷியா மற்றும் பனாமா அணிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மோதவுள்ளன.




