ஈரான் அணிக்கு அமெரிக்கா பாரபட்சம்: எகிப்து பயிற்சியாளர் சீற்றம்
“உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்று எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹோசாம் ஹாசன் (Hossam Hassan) தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் ஈரான் பங்கேற்பதற்கு, அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்காவின் கடுமையான விதிகளால் தமது அணி வீரர்களின் உடல்நிலை மற்றும் தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே ஈரான் அணிக்கு ஆதரவாக, எகிப்து அணி குரல் கொடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஈரானுக்கு எதிரான குழுநிலை இறுதிப் போட்டிக்கு முன்னதாக இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹோசாம் ஹாசன்
“உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ள அனைத்து அணிகள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது” என்றார்.
மேலும், FIFA அமைப்பு எப்போதும் பரஸ்பர மரியாதை மற்றும் நியாயமான ஆட்டத்தையே (Fair play) எதிர்பார்க்கிறது.
எனவே, அனைத்து அணிகளுக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும். அனைவரும் அனைவரையும் மதிக்க வேண்டும், அனைவருக்கும் இடையில் நியாயம் இருக்க வேண்டும். ஈரான் அணி நான் மிகவும் மதிக்கும் அணிகளில் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை அவர் நேரடியாக விமர்சிக்காவிட்டாலும், சக அணி ஒன்றின் பயிற்சியாளரிடமிருந்து ஈரானுக்கு கிடைத்துள்ள அரிய ஆதரவாக இது பார்க்கப்படுகிறது.
ஈரான் எதிர்கொண்ட கடுமையான கட்டுப்பாடுகள்
இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஈரான் அணி தனது பயிற்சி முகாமை மெக்சிகோவில் அமைத்திருந்தது.
ஆனால், அதன் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் (West Coast) நடத்தப்பட்டன.
இதனால், ஈரான் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் போட்டி தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மேலும், போட்டி முடிந்தவுடன் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டிருந்தனர்.
சியாட்டிலில் (Seattle) எகிப்திற்கு எதிராக நடைபெறவுள்ள இந்த முக்கிய போட்டிக்கு முன்னதாக, அமெரிக்க அதிகாரிகள் இந்த கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தி, ஈரான் அணி (Team Melli) ஒரு நாளைக்கு முன்பாகவே சியாட்டில் நகரத்திற்கு வர அனுமதித்துள்ளனர்.
அமெரிக்காவின் இந்த பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகள் தனது வீரர்களின் உடற்தகுதியையும், ஆட்டத்திற்கான தயாரிப்புகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக ஈரானின் மேலாளர் அமீர் காலெனோய் (Amir Ghalenoei) வியாழக்கிழமை மீண்டும் சுட்டிக்காட்டினார்.





