உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பலத்த பாதுகாப்புடன் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை (21) நடைபெறவுள்ளன.
இதனை முன்னிட்டு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாளை அதிகாலை முதல் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றங்கள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு தேவாலயத்தை அண்மித்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய காலை 8:45 க்கு முதலாவது குண்டு வெடித்த நேரத்தைக் குறிக்கும் வகையில் அனைத்துத் தேவாலயங்களிலும் ஒருமுறை மணி ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு காலை 8:47 க்கு மெழுகுவர்த்திகள் அல்லது விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு காலை 8:50 க்கு விசேட ஆராதனைகள் மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் உதவி ஆயர் அன்டன் ரஞ்சித் ஆகியோரின் தலைமையில் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.
இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி மற்றும் பௌத்த, இந்து, இஸ்லாமிய மதத் தலைவர்களின் விசேட உரைகளும் இடம்பெறவுள்ளன.
மேலும் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆயர் மெக்ஸ்வெல் சில்வா மற்றும் ஆயர் ஜே.டி. அந்தோனி தலைமையில் காலை 7:30 க்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு காலை 8:45 க்கு உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
அன்றைய தினம் மாலை 04 மணிக்கு நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா மைதானத்திலிருந்து நீதி மற்றும் உண்மை வேண்டி மாபெரும் பிரார்த்தனைப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் பேரணி கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தை சென்றடைந்ததும், இலங்கையின் அனைத்து ஆயர்கள் இணைந்து விசேட ஆசீர்வாத வழிபாடுகளை முன்னெடுப்பார்கள் என கத்தோலிக்க திருச்சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் உயர்தர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த
தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்தனர், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ISIS உடன் தொடர்புடைய உள்ளூர் பயங்கரவாதக் குழுவினால் நடத்தப்பட்ட இத்தாக்குதல், கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.





