இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள டெங்கு தடுப்பூசி – WHO அங்கீகாரம்
இந்தியா தனது முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமை இயக்குநர் இந்த ‘க்யூடெங்கா’ தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார்.
இந்தத் தடுப்பூசி 4 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்பு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இது கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தத் தடுப்பூசிக்கு முன்-தடுப்பூசி பரிசோதனை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மூன்று மாத காலத்திற்குள் 0.5 மில்லி தடுப்பூசியின் இரண்டு டோஸ்களாக வழங்கப்படுகிறது.
2022 முதல், ‘க்யூடெங்கா’ தடுப்பூசி 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
டெங்கு பரவலாக உள்ள பகுதிகளுக்கு இந்தத் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. மேலும், முன்-தடுப்பூசி பரிசோதனைகள் தேவையில்லாததால், அதிக பாதிப்புள்ள பகுதிகளில் உள்ள பொது நோய்த்தடுப்புத் திட்டங்களில் இது சேர்க்கப்பட்டுள்ளது.
‘க்யூடெங்கா’ தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பால் முன்-தகுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது அதன் சர்வதேச தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்துள்ளது.
இருப்பினும், இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது இந்தியா எடுத்துள்ள ஒரு மாபெரும் நடவடிக்கை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டெங்கு பாதிப்புள்ள மற்றும் டெங்கு இல்லாத பகுதிகளில் 28,000 பங்கேற்பாளர்களைக் கொண்டு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் நடத்தப்பட்ட 19 மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே இந்த ஒப்புதல் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
4 முதல் 60 வயதுக்குட்பட்ட மக்களிடம் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை மதிப்பிடுவதற்காக இந்தியாவில் நடத்தப்பட்ட ‘மூன்றாம் கட்ட DEN-302’ மருத்துவப் பரிசோதனையின் முடிவுகளும் இந்த ஒப்புதலுக்கு வழிவகுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





