பாதுகாப்பு உறவை வலுப்படுத்த டெல்லி, கொழும்பு இணக்கம்
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட இந்திய பாதுகாப்பு பிரதிநிதிகள் குழு , பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) சந்தித்து பேச்சு நடத்தியது.
இந்திய பிரதிநிதிகள் குழுவில் அந்நாட்டு விமானப்படைத் பிரதித் தளபதி ஏயார் மார்ஷல் Ashutosh Dixit, பிரதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் Ajay Kochhar, பிரதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் Sandeep Jain மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர்.
இதன்போது இடம்பெற்ற சுமுகமான சந்திப்பில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் இந்திய பிரதிநிதிகள் குழுவினரும் கலந்துரையாடினர்.
பிராந்திய மற்றும் கடல்சார் பாதுகாப்பு நிலைமைகள், உருவாகிவரும் பாதுகாப்பு சவால்கள், அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கான தயார்நிலை மற்றும் பதிலளிக்கும் ஆற்றல்களை மேலும் வலுப்படுத்துதல், அத்துடன் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கு இந்திய அரசாங்கம், இந்திய மக்கள் மற்றும் இந்திய ஆயுதப்படைகள் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவு மற்றும் உதவிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.
குறிப்பாக, டிட்வா அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய பெறுமதிமிக்க உதவியை அவர் நினைவுகூர்ந்ததுடன், இத்தகைய ஆதரவு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, ஒற்றுமை மற்றும் நெருக்கமான பிணைப்புகளை மேலும் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.





