அரசியல் இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் யுத்த விதவைகள்: தமிழர்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சி

“தமிழர் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தால் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் என்பது எவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதை அறிய முடியும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“இலங்கையில் பெண்களுக்கான வாழ்வாதாரம், பெண்களின் இயற்கையான வாழ்வு, அவர்களின் வாழ்வியல் அணுகுமுறைகள் முக்கியமானது.

எனக்கு முன்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மஹிந்த ராஜபக்சவின் அரசில் மகளிர் விவகார பிரதி அமைச்சராக இருந்தவர். அப்போது அவர் இந்தச் சபையில் வடக்கு மற்றும் கிழக்கில் 90 ஆயிரம் யுத்த விதவைகள் இருக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்த விதவைகள் இருப்பது என்பது சாதாரணமானது அல்ல. கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்தால் தமிழ் மக்களின் இனப்பெருக்கம் என்பது எவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதனை புரிந்துகொள்ளலாம். இது எமது மண்ணில் எந்தளவுக்குப் பாதிப்பானது என்பதனையும் அறியலாம்.

இதேவேளை இவ்வளவு காலம் இல்லாத புதிய விடயமான பெண்கள் பற்றிய இந்தத் தேசிய ஆணைக்குழு வரவேற்கத்தக்கது. இவர்கள் யுத்த விதவைகள் விடயத்தில் எவ்வாறு நடக்கப் போகின்றனர்?

இவர்களின் செயற்றிட்டங்கள் எவ்வாறு இருக்கப் போகின்றன? பல பெண்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் தலைவிகளாக இருக்கின்றனர். பிள்ளைகளைப் படிப்பித்து வளர்த்துள்ளனர். பரீட்சை பெறுபேறுகளில் அவற்றை அறியலாம்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வரும் போது பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கணவன் இறந்த பின்னர் குடும்பத்தை அந்தப் பெண்கள் கொண்டு சென்றனர். ஆனால், அவர்களுக்கான வாழ்வாதார உதவி இன்று வரையில் சரியான முறையில் வழங்கவில்லை.

இவர்கள் விடயத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அமைச்சர் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழர் பண்பாட்டில் குங்குமப் பொட்டு அடையாளமாக இருக்கின்றது. எத்தனையோ பெண்கள் கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் குங்குமப் பொட்டுடனும் தாலியுடனும் இருக்கின்றனர்.

இதனால் இந்த ஆணைக்குழுவினால் செய்யப்படவுள்ள பணிகள் ஏனைய ஆணைக்குழுவைப் போலல்லாது எமது பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

கடந்த 2017.02.20ஆம் திகதி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் தொடர் போராட்டங்களை ஆரம்பித்தனர். அது இன்று 10 வருடங்களாகின்றன.

இந்தத் தொடர் போராட்ட காலத்தில் 420 இற்கும் மேற்பட்ட தாய், தந்தைகள் இறந்துள்ளனர். இந்தப் போராட்டத்துக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்தும் போராடுகின்றனர்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயங்கள் இரட்டிப்பாக வேண்டிய சூழல் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் நீதி கிடைக்க வேண்டிய பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

இதனால் நீதிக்காகப் போராடும் பெண்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதியான நேர்மையான இனங்களை ஒற்றுமைப்படுத்தும் வகையில் தமது செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை