செனகலிடமிருந்து பறிக்கப்பட்ட ஆபிரிக்கக் கிண்ணம்: நவம்பர் இறுதியில் தீர்ப்பு
2026 ஆம் ஆண்டுக்கான ஆபிரிக்க நாடுகளின் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் (AFCON) செனகலிடமிருந்து பட்டம் பறிக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு நவம்பர் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என விளையாட்டுக்கான நடுவர் தீர்ப்பாயம் (CAS) உறுதிப்படுத்தியுள்ளது.
2026 நவம்பர் மாத இறுதியில் முழுமையான தீர்ப்பு வெளியிடப்படும் என திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மொராக்கோவின் ரபாத் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், போட்டியை நடத்தும் நாடான மொராக்கோவை மேலதிக நேரத்தில் 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செனகல் வெற்றிபெற்றது.
எனினும், ஆபிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (CAF), செனகல் போட்டியிலிருந்து விலகியதாகக் கருதி, அந்த அணியின் வெற்றியை ரத்துச் செய்து, மொராக்கோவுக்கு 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி வழங்கியது. இதனால் செனகலிடமிருந்து கிண்ணப் பட்டம் பறிக்கப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து செனகல் விளையாட்டுக்கான நடுவர் தீர்ப்பாயத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.
இறுதிப் போட்டியில் என்ன நடந்தது?
இறுதிப் போட்டியின் வழமையான ஆட்ட நேரத்தின் கடைசிப் பகுதியில் செனகலுக்கு எதிராகப் பெனால்டி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். சில வீரர்கள் தமது உடைமாற்றும் அறைக்குச் சென்றதுடன், சுமார் 14 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் மைதானத்துக்குத் திரும்பி ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
எனினும், மொராக்கோவுக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பு கோலாக மாற்றப்படவில்லை. இதனால் போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றது. அந்த நேரத்தில் செனகல் கோல் அடித்து 1–0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றது.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர், ஆபிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பின் மேன்முறையீட்டுச் சபை, மைதானத்தை விட்டு வெளியேறியதன் மூலம் செனகல் போட்டியைத் துறந்துவிட்டதாகத் தீர்மானித்தது. இதனடிப்படையில், போட்டியின் முடிவு மாற்றப்பட்டு மொராக்கோவுக்கு 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 25ஆம் திகதி செனகல் விளையாட்டுக்கான நடுவர் தீர்ப்பாயத்தில் மேன்முறையீட்டைத் தாக்கல் செய்தது. சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர், ஒக்டோபர் 8ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
செனகல், மொராக்கோ மற்றும் ஆபிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு ஆகிய தரப்புகளின் வாதங்களையும் தீர்ப்பாயம் கேட்டறிந்துள்ளது.
போட்டியின் நடுவர் எடுத்த முடிவே இறுதியானது என்றும், அவர் ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்த அனுமதித்ததன் மூலம் போட்டி முழுமையாக நிறைவடைந்தது என்றும் செனகல் தரப்பு வாதிடுகிறது.
முன்னதாக, விசாரணை முடிவடைந்த சில நாட்களுக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது சட்டரீதியான காரணங்களையும் உள்ளடக்கிய முழுமையான தீர்ப்பை வெளியிடத் தீர்ப்பாயம் தீர்மானித்துள்ளது.
விளையாட்டுக்கான நடுவர் தீர்ப்பாயத்தின் தலைமைப் பணிப்பாளர் மாத்தியூ ரீப், இந்தத் தீர்ப்புக்காகக் காத்திருப்பது ரசிகர்களுக்கு நீண்ட காலமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வழக்கின் உண்மைகள் தெளிவாக இருப்பதாகவும், விசாரணையின் முக்கிய கவனம் நடைமுறை மற்றும் சட்டரீதியான அம்சங்கள் மீதே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை பிரான்ஸைச் சேர்ந்த விளையாட்டுச் சட்ட நிபுணர் ஜெரால்ட் சைமன் தலைமையிலான குழு விசாரிக்கிறது. இத்தாலிய சர்வதேசச் சட்டப் பேராசிரியர் லூய்கி ஃபுமகல்லி மற்றும் ஹாம்பர்க் நகரைச் சேர்ந்த, சூரிச் பல்கலைக்கழகச் சட்டப் பேராசிரியரான உல்ரிச் ஹாஸ் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
விளையாட்டுக்கான நடுவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள், சட்டரீதியாக நடுவர் தீர்ப்புகள் என அழைக்கப்படுகின்றன. அவை தேசிய நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு இணையான மதிப்பைக் கொண்டுள்ளன. சூழ்நிலையைப் பொறுத்து, இத்தீர்ப்புகளை விளையாட்டு அமைப்புகள் அல்லது அரச நீதிமன்றங்கள் நடைமுறைப்படுத்த முடியும்.




