பச்சைக் குத்தினால் இலங்கையில் சிறைக்கு செல்ல நேரிடுமா?
இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் கீழ், பச்சை குத்துதல், நீண்ட தலைமுடி வைத்திருத்தல் அல்லது குறிப்பிட்ட ஆடைகளை அணிதல் போன்ற காரணங்களுக்காக மாத்திரம் எவரையும் கைது செய்ய முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“தமக்குப் பிடித்த ஆடைகளை அணிவது, பச்சை குத்திக்கொள்வது அல்லது விரும்பிய சிகை அலங்காரத்தைக் கொண்டிருப்பது ஆகியவை அடிப்படை உரிமைகளாகும். எனவே, இதனை குற்றச்செயலாக காண்பித்து, சிறை தண்டனைக் கிடைக்கும் எனக் கூறி தகவான தகவல்களை பரப்ப வேண்டாம்” எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) உரையாற்றிய அவர், முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான விளக்கங்கள் பரப்பப்படுவதாகவும், பச்சைக் குத்தினால் கைது, முடி வளர்த்தால் கைது எனக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களை விசாரித்தல், வழக்குத் தொடர்தல் மற்றும் அவற்றைத் தடுத்தல் ஆகியவற்றுக்கான புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் 4(2) ஆவது பிரிவில் உள்ள உள்ளடக்கங்களை விளக்கிய அமைச்சர், ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவில் அங்கம் வகிக்கிறாரா என்பதைத் தீர்மானிப்பதற்காக 12 காரணிகள் பரிசீலிக்கப்படலாம் எனக் குறிப்பிட்டார். குற்றக்குழுக்களுடன் தொடர்புடையவர்களுக்கே இது பொருந்தும்.
இவை தனித்தனியான குற்றங்களாகக் கருதப்படமாட்டாது என்றும், சாதாரண நபர்களின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதுவதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்காது என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும், குற்றக் குழுக்களின் உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்காக இத்தகைய அறிகுறிகள் விசாரணைகளின்போது பரிசீலிக்கப்படுகின்றது எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல், கொலைகள், ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் திறம்படக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடைய சில நடவடிக்கைகளை விசாரிப்பதற்கும், அவற்றில் ஈடுபடுவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும் தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளை மீறுவதாகக் கருதுவோர், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடும் உரிமை உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
சில அரசியல் குழுக்களும் சமூக ஊடகக் கருத்தாளர்களும் அரசியல் நோக்கங்களுக்காகச் சட்டமூலத்தைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் நீதி அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.




