பேச்சுவார்த்தைகளில் இணக்கம் : கமேனியின் இறுதிச் சடங்கை தொடர்ந்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தை
ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து ஈரானும், அமெரிக்காவும் நேற்றைய தினம் பதற்ற தணிப்பு ஒப்பந்தத்தை எட்டியதாக ‘தி நியூயார்க் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
கட்டாரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கட்டார் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி , இப்பேச்சுவார்த்தை நேர்மறையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கத்தாரும் பாகிஸ்தானும் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இரு தரப்பினருடனும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அவர் மேலும் கூறினார்.
பதற்றங்கள் தற்காலிகமாகத் தணிந்த போதிலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் மீது யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்து வாஷிங்டனும் தெஹ்ரானும் பிளவுபட்டுள்ளன.
அந்த நீர்வழிப்பாதை வழியாக நடைபெறும் கடல்வழிப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தனக்கு உரிமை உண்டு என ஈரான் கூறிவருகிறது.
மேலும், தற்போதைய இடைக்கால ஏற்பாடுகள் காலாவதியானவுடன், போக்குவரத்து கட்டணங்களை விதிக்க தனக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் தெஹ்ரான் வலியுறுத்தியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் அந்த நிலைப்பாட்டை நிராகரித்து, அந்த நீர்வழிப்பாதையை ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை என விவரித்ததோடு, கப்பல் போக்குவரத்தின் மீது சுங்கவரி விதிப்பது குறித்த ஈரானின் எந்தவொரு கோரிக்கையையும் எதிர்க்கிறது.
இது இரு நாடுகளுக்கும் இடையே மீளவும் பதற்றம் ஏற்பட வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.





