காசா பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
காசா பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டம்விடுவதை தவிர்க்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹமாஸ் தீவிரவாதக் குழு எல்லையைத் தாண்டி தீப்பற்றும் பட்டங்களை வீசும் தந்திரத்தை மீண்டும் தொடங்கினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காசாவில் இடம்பெயர்ந்தோர் முகாம்களையும் தங்குமிடங்களையும் நடத்தும் உள்ளூர் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மக்கள் குழுக்கள்,நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,”நாங்கள் களத்தில் அயராது உழைத்து, இந்த நடைமுறையைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.
பாதுகாப்பாக விளையாடுவதற்கும் வாழ்வதற்குமான மிக அடிப்படை உரிமைகள் ஏற்கனவே மறுக்கப்பட்ட எங்கள் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, மாறாக அவர்களின் அப்பாவி உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இதைச் செய்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டில், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு இஸ்ரேல் விதித்த முற்றுகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காசா மக்கள் தீமூட்டும் பலூன்களையும் பட்டங்களையும் எல்லை தாண்டி அனுப்பினர்.
இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் திறந்தவெளி வயல்களிலும், விவசாய நிலங்களிலும் தீ பரவியது. இது இஸ்ரேலிய மக்களை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




