மாறுமா ஈரானின் மனம்? பாகிஸ்தான் ராணுவ தளபதி தீவிர வியூகம்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடைக்கும் நோக்கில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தெஹ்ரானில் உள்ள அதிகார மையங்களில் தீவிரப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.
இப்பயணத்தின் போது ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானின் தலைமைப் பேச்சாளராகச் செயல்படும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் ஆகியோரை ஆசிம் முனீர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
எனினும், ஒரு செல்வாக்குமிக்க இராணுவத் தலைவராக இருக்கும் ஆசிம் முனீர், ஈரானின் இராணுவ அதிகாரத்துவத்தை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதிலேயே அவரது மத்தியஸ்த முயற்சியின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளதாக பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இச்சந்திப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் தெஹ்ரானில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்,
“நாம் பலத்துடனும் கண்ணியத்துடனும் இருக்கும் இந்தச் சூழலிலேயே போரை முடிவுக்குக் கொண்டுவருவது நல்லது; நமது வெற்றியை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இது வாஷிங்டனுக்கு மட்டுமன்றி ஈரானின் பாதுகாப்புத் துறைக்கும் அவர் விடுத்த செய்தியாகவே பார்க்கப்பட்டது.
ஆனால், இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 21 அன்று கருத்து தெரிவித்த ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹி, அமெரிக்காவின் தவறான கணக்கீடுகளுக்கு “கடுமையான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி வழங்கப்படும்” என எச்சரித்தார்.
இது ஈரானின் ஜனாதிபதிக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டைத் தெளிவாகக் காட்டியது.
இந்த பின்னணியில், ஈரானின் உச்சத் தலைவர் முஜ்தபா காமெனியின் பிரதிநிதியும் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளருமான ஜெனரல் மொஹ்சன் ரெசாயியுடனான ஆசிம் முனீரின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.




