பிஹாரில் மாணவர் போராட்டம் தீவிரம்
70 வது பிஹார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (BPSC) தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, தலைநகர் பாட்னாவில் மாணவர்கள் முன்னெடுத்த பேரணியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, தற்போது பிஹாரிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
70-வது BPSC தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டும் மாணவர்கள், அந்தத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வை ஒரே கட்டமாக நடத்துதல், தவறான பதில்களுக்கான எதிர்மறை மதிப்பெண் (Negative Marking) முறையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர்.
பாட்னா காந்தி மைதானத்தில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் சென்ற மாணவர்களை ‘டாக் பங்களா’ சந்திப்பில் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் தண்ணீர் பீய்ச்சி அடித்ததுடன் பலரைக் கைது செய்தனர். இருப்பினும், தடுப்புகளை உடைத்துக்கொண்டு மாணவர்கள் முன்னேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, பாட்னா மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்விச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், பிரதான கோரிக்கைகள் தொடர்பில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




