செம்மணி புதைகுழி: உண்மை கண்டறியப்படுமென நீதி அமைச்சர் உறுதி
“செம்மணி மனித புதைகுழி தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படும்” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25) சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்தச் சூளுரையைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பதிலளிக்கையில்,
“செம்மணி அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டிஎன்ஏ (DNA) பகுப்பாய்வு என்று வரும்போது, அதன் தன்மை மற்றும் வகையைப் பொறுத்தே சர்வதேச அளவில் புகழ்பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் உதவியை நாட வேண்டிவரும்.
இது குறித்துப் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் நீதிமன்றம் என்பன எமக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பாகத் தூதரக மட்டத்திலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
செம்மணி விவகாரத்தில் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதே மக்கள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதனை நாம் நிச்சயம் செய்வோம்” என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.




