இங்கிலாந்து அணி அபார வெற்றி
Utilita Bowl மைதானத்தில் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில், இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் (Harry Brook) தனக்குரிய பாணியில் அதிரடி காட்டி தனது இரண்டாவது மற்றும் அதிவேக T20 சதத்தைப் பதிவு செய்தார்.
இங்கிலாந்தின் முதன்மை வீரரான புரூக், 42 பந்துகளில் சதமடித்தார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பில் சால்ட் (Phil Salt) அடித்த 39 பந்து சதத்திற்கு அடுத்தபடியாக, இங்கிலாந்து வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாக இது பதிவானது.
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ஓட்டங்களை பெற்றது.
255 ஓட்டங்கள் என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணியின் தலைவர் ஹெரி புரூக் 49 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களை விளாசினார்.
இவருடன் இணைப்பாட்டத்தில் இருந்த ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 80 ஓட்டங்களை குவித்தார்.
இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர் 12 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 33 ஓட்டங்களை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட T 20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 எனக் முன்னிலை பெற்றுள்ளது.




