வெளிநாட்டு மாணவர் தெரிவில் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு: பிரித்தானியா முன்னிலை
வெளிநாட்டு மாணவர்களின் கல்வி இலக்காக ஆஸ்திரேலியாவைத் தெரிவு செய்வதற்கான ஆர்வம், கடந்த ஆறு மாதங்களில் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது.
குடியேற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நிலவும் தீவிர விவாதங்களுக்கு மத்தியில், வெளிநாட்டு மாணவர்கள் நாட்டுக்கு வருவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொழிற்கட்சி, கூட்டணி மற்றும் வன் நேஷன் கட்சி ஆகியவை முன்னெடுத்து வருகின்றன. இதன் பின்னணியிலேயே வெளிநாட்டு மாணவர்களின் ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் குடிவரவு அமைச்சர் டோனி புர்க் அறிவித்த நடவடிக்கைகளின்படி, வெளிநாடுகளிலிருந்து உயர்கல்வியைத் தொடர வரும் மாணவர்கள் தமது குடும்பத்தினரை அழைத்து வருவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
அத்துடன், உயர்நிலைத் தகைமையைப் பெறும் நோக்கில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு மாத்திரமே கல்வி நிறுவனங்களை மாற்றுவதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
குடியேற்ற ஆலோசனை நிறுவனமான IDP Education வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களின்படி, வெளிநாட்டில் கல்வி கற்கத் திட்டமிடும் மாணவர்களில் நான்கில் ஒருவருக்கும் குறைவானவர்களே ஆஸ்திரேலியாவைத் தமது முதன்மைத் தெரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை மூன்றில் ஒருவருக்கும் அதிகமாக இருந்தது.
இதே காலப்பகுதியில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வெளிநாட்டு மாணவர்களின் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால், உலகின் திறமையான மாணவர்களை ஈர்ப்பதற்கான போட்டியில் ஆஸ்திரேலியா கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளது.
விசா விதிமுறைகள் தொடர்ச்சியாக மாற்றப்படுவதும், வெளிநாட்டு மாணவர் அனுமதிக்கான திட்டமிடல் இலக்குகளில் அடிக்கடி திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதும் மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக IDP Education தெரிவித்துள்ளது.
“உலகின் மிகச் சிறந்த மாணவர்களுக்கு இன்று பல்வேறு தெரிவுகள் உள்ளன. இவ்வாறான நிச்சயமற்ற நிலை ஏற்படும்போது, அவர்கள் வேறு நாடுகளைத் தெரிவு செய்யத் தொடங்குகின்றனர். அந்த மாற்றத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது கடினமானது” என IDP நிறுவனத்தின் பிரதான பங்காளித்துவ அதிகாரி சைமன் எம்மெட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுடன் அதிகரிக்கும் போட்டி
உலகளாவிய ரீதியில் வெளிநாட்டு மாணவர்களால் பரிசீலிக்கப்படும் முக்கிய கல்வி இலக்காக அவுஸ்திரேலியா தொடர்ந்து விளங்குவதாக IDP ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 54 சதவீதத்தினர் அவுஸ்திரேலியாவைக் கல்வி இலக்காகக் கருதியுள்ளனர்.
எனினும், இந்த விகிதம் ஐந்து சதவீதம் குறைந்துள்ளதுடன், வேகமாக முன்னேறி வரும் பிரித்தானியா அவுஸ்திரேலியாவை முந்தக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஜூலை மாதம் மாணவர் விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு, இளநிலைப் பட்டப்படிப்புக்கு 2,500 அவுஸ்திரேலிய டொலர்களாகவும், முதுநிலைப் பட்டப்படிப்புக்கு 5,750 அவுஸ்திரேலிய டொலர்களாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம், உலகிலேயே மாணவர் விசாவுக்கான அதிக கட்டணத்தைக் கொண்ட நாடாக அவுஸ்திரேலியா மாறியுள்ளது.
இதற்கு முந்தைய மாதமான ஜூன் மாதத்தில், அவுஸ்திரேலியாவில் மாணவர் விசா நிராகரிப்பு விகிதமும் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவாக 24.6 சதவீதத்தை எட்டியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த விகிதம் வெறும் 7.9 சதவீதமாகவே காணப்பட்டது.
கனடாவின் அனுபவம் எச்சரிக்கையாக அமைய வேண்டும்
வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்த கனடாவில், சர்வதேச மாணவர் சேர்க்கை 29 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த அனுபவம், குடியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பும் ஏனைய நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும் என சைமன் எம்மெட் தெரிவித்துள்ளார்.
“மாணவர் கொள்கைகளில் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை விதிப்பதைத் தவிர்ப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது எடுக்கப்படும் தீர்மானங்கள் விசா அனுமதிகளைப் பாதிக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் கல்வி கற்க வரத் திட்டமிடும் மாணவர்களையும் இத்தீர்மானங்கள் பாதிக்கும். மாணவர்கள் தமது கல்வி இலக்குகளைத் தீர்மானிப்பதற்கு நீண்டகாலம் எடுத்துக்கொள்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள மாணவர்களுக்கும் சவால்கள்
அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே கல்வி கற்று வரும் வெளிநாட்டு மாணவர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக IDP அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கையின்படி, ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பகுதிநேர வேலைவாய்ப்புகளைப் பெறுவதும், பட்டப்படிப்புக்குப் பின்னரான வேலைவாய்ப்புகளைத் தேடுவதும் தாம் எதிர்பார்த்ததை விடக் கடினமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மூன்றில் ஒருவருக்கும் அதிகமான மாணவர்கள் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
விசா விதிமுறைகள், கல்விச் செலவுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவை வெளிநாட்டு மாணவர்களின் தெரிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சர்வதேச மாணவர்களை ஈர்ப்பதற்கான போட்டியில் ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் சவால்கள் மேலும் அதிகரித்துள்ளன.




