தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை: நீதி வழங்க மறுக்கும் இஸ்ரேல் – ஆஸ்திரேலியா போர்க்கொடி
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் (IDF) தாக்குதலில் உயிரிழந்த ஆஸ்திரேலிய நிவாரணப் பணியாளர் சோமி பிராங்க்ளினின் (Zomi Frankcom) மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரப்போவதில்லை என்ற இஸ்ரேலிய அரசின் முடிவுக்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 ஏப்ரல் மாதம் காசாவில் ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ (WCK) அமைப்பின் சார்பில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த சோமி பிராங்க்ளின் உட்பட 7 ஊழியர்கள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங்,
“நாங்கள் எதிர்பார்த்த பொறுப்புக்கூறலில் இருந்து இந்த முடிவு மிகவும் விலகி உள்ளது” எனக் குறிப்பிட்டதுடன், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆஸ்திரேலியாவிற்கான இஸ்ரேலிய தூதருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், உலக மனிதநேய தினத்தில் இத்தகைய அறிவிப்பு வெளியானது மேலும் வேதனையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், இந்தத் தாக்குதலில் நடைமுறை தவறுகள் மற்றும் தவறான அடையாளங்காணல் ஆகியவை இடம்பெற்றிருந்த போதிலும், சம்பந்தப்பட்ட இராணுவத் தளபதிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த முடிவை முற்றிலும் மறுத்துள்ள ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ (WCK) அமைப்பு, உண்மைகளை மறைத்து இராணுவத்தின் சட்டவிரோத செயல்களை நியாயப்படுத்த முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், சுயாதீனமான விசாரணைக்கே கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை, உயிரிழந்த நிவாரணப் பணியாளர்களுக்காகத் தொடர்ந்து நீதி கோரப்படும் என ஆஸ்திரேலிய அரசு உறுதியளித்துள்ளது.





