79 வீதமான இலங்கையர்கள் இந்தியா மீது சாதகமான கண்ணோட்டம்
இலங்கை மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் எகனொமிக் ரைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த, இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் மற்றும் பிராந்தியத்தில் புதுடெல்லி எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் இந்தியாவை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது குறித்து, பியூ ஆய்வு மையத்தின் (Pew Research Center) ஒன்றை மேற்கோள்காட்டி, அண்மைய ஆய்வை மேற்கோண்ட ஆய்வில், 79 வீதமான இலங்கை மக்கள் இந்தியா மீது சாதகமான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாக, கண்டறியப்பட்டுள்ளது.
இது என்னை மிகவும் பாதித்தது. ஏனென்றால், எனது இளமைக் காலத்தில், இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் இருந்த சமயத்தில் நான் அங்கு பணியாற்றினேன்.
அந்த உறவின் மிகவும் கடினமான தருணங்களை நான் கண்டேன்.
79 வீதமான இலங்கையர்கள் இந்தியா மீது சாதகமான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம், எனது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கும்.
கடந்த காலத்தில் இந்தியாவின் அண்டை நாடுகள் மிகவும் சாதகமாக இருந்தன என்றில்லை.
அண்டை நாடுகளுடனான உறவுகள் வரலாற்று ரீதியாக ஒத்துழைப்பு மற்றும் சிரமங்கள் இரண்டையும் உள்ளடக்கியுள்ளன.
மாலைதீவில், ஒரு பெரிய விமான நிலைய ஒப்பந்தத்திலிருந்து ஒரு இந்திய நிறுவனம் வெளியேற்றப்பட்டது, அது ஒரு இந்திய நிறுவனம் என்பதால்தான் நிகழ்ந்தது.
அண்டை நாடுகளுடனான உறவுகளை நிர்வகிப்பதில் சரியான சமநிலையைக் கண்டறிவதே இந்தியாவிற்கான சவால்.
எமது வெளியுறவு கொள்கை பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டது.
அண்டை நாடுகள் எப்போதும் இந்தியாவின் நலனுக்காக செயறபட வேண்டும் என, நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
எந்தவொரு உறவும் சிறப்பாக செயற்பட வேண்டுமெனில், அது பரஸ்பர நலனை பூர்த்தி செய்ய வேண்டும்.
அது, அந்த நாட்டுக்கும் பலனளிக்க வேண்டும்; நமக்கும் பலனளிக்க வேண்டும்.
அண்டை நாடுகளை நாம் புரிந்து கொண்டு மதிப்பது போல, அந்த நாடுகளும் நம்மை மதிக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறோம்.
பயங்கரவாதம் போன்ற விவகாரங்களில் எமது நாட்டு மக்களின் கருத்தை புறக்கணிக்க முடியாது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாக நம் மக்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் நீண்டகால வரலாறு உண்டு. எனினும், எமக்கு எதிராக பயங்கரவாதத்தை பயன்படுத்துவதில் பாகிஸ்தான், தனித்து நிற்கிறது.
அண்டை நாடு மீது தாக்குதல் நடத்தவும், நெருக்கடி தரவும் பாகிஸ்தானை போல பயங்கரவாதத்தை வேறெந்த நாடும் பயன்படுத்துவதில்லை.
இந்தியாவும், சீனாவும் பெரிய பொருளாதார நாடுகள்; உலகளாவிய விநியோகத் தொடரில் அங்கம் வகிப்பவை. நிலையான உறவை பேணுவதில் இரு நாடுகளுக்கும் நன்மை உள்ளது.
எனினும், இரு தரப்பு உறவை எல்லை பகுதியில் நிலவும் சூழலே தீர்மானிக்கிறது.
எமது நாடு தன் சொந்த திறன்களை வளர்த்துக் கொள்வதோடு, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுடனும் தொடர்ந்து நல்லுறவை பேண வேண்டும்.
இன்றைய உலகம் போட்டி நிறைந்ததாக உள்ளது; நாம் நம் பலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லையில் செய்தது போலவே, சீனாவை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நம் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் ஜெய்சங்கர் மேலும் கூறியுள்ளார்.




