NPPஐ வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பம்: 05 ஆம் திகதி முதல் நேரில் களமிறங்கும் அநுர
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நிலைப்பாடு நிலவுவதாகக் கூறுவதை எதிரணியினர் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் ஒன்றுகூடிச் சூழ்ச்சி செய்வது உண்மையான அரசியல் எதிர்ப்பு நடவடிக்கை அல்ல” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
“கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராகத் திரண்ட மக்களை விடவும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே மக்கள் உள்ளனர்; எனவே மீண்டுமொரு போராட்டத்தை நடத்த நேரிடும்” என எதிரணி தரப்பில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்துக் கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிரணியினர் சும்மா உளறிக் கொண்டிருக்காமல் தைரியமிருந்தால் போராட்டத்தை முன்னெடுத்துக் காட்டட்டும். ஜி.எல்.பீரிஸின் வீட்டில் இரவு வேளைகளில் திரண்டு சூழ்ச்சி செய்து கொண்டிருக்காமல், முடிந்தால் வீதிக்கு இறங்கி மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்திக் காட்டட்டும்.
வெறும் வீரவசனங்கள் தேவையில்லை. தேசிய மக்கள் சக்தியாக நாம் கட்சியை அடிமட்டம் வரை பலப்படுத்தி வருகின்றோம். கிராமம் மற்றும் தொகுதி மட்டத்தில் மறுசீரமைப்பு மற்றும் பலப்படுத்தல் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் 05-ஆம் திகதி முதல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மாவட்ட ரீதியிலான பிரம்மாண்ட மக்கள் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
மக்கள் உண்மையிலேயே அரசாங்கத்திற்கு எதிராக உள்ளனர் என்பதை எதிரணியினரால் நிரூபிக்க முடியுமானால் நிரூபிக்கட்டும். நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது எவ்வாறு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தோம் என்பதை அவர்கள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் நளிந்த ஜயதிஸ்ஸ.




