தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; 15 பேர் காயம்
தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
பேங்காக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தின் பாங் குருவாய் (Bang Kruai) மாவட்டத்தில் அமைந்துள்ள ‘டெப்சிரின் நொந்தபுரி’ பாடசாலையில் (Debsirin Nonthaburi School) வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவசர உதவிப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாக Thai Enquirer செய்தி வெளியிட்டுள்ளது.
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருவதாக பேங்காக்கைச் சேர்ந்த Poh Teck Tung என்ற மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர கால வாகனங்கள் தடங்கலின்றி பாடசாலைக்குச் சென்று வர ஏதுவாக, அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளைப் பாதைகளைச் சீர் செய்து வழிவிடுமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் அந்தப் பாடசாலையின் மாணவர் ஒருவரே என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தாய் என்குவையரர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, அதிகாரிகள் பாடசாலை வளாகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ஆசிரியர்கள் மாணவர்களைப் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளங்கள் குறித்த மேலதிக விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை
சந்தேகநபர் குறித்தோ அல்லது துப்பாக்கிச் சூட்டிற்கு வழிவகுத்த காரணம் குறித்தோ அதிகாரிகள் இதுவரை மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.




