ஹமாஸ் ஆயுதப்படை தளபதியையும் கொன்றுவிட்டோம் – இஸ்ரேல் அறிவிப்பு
வடக்கு காசா முனையிலுள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படையின் தலைவரான ‘இஸ் அல்-டின் அல்-பைக்’ (Izz al-Din Al-Beik) , இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்களைத் திட்டமிட்டது மற்றும் போராளிகளைப் படையில் சேர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அல்-பைக்கை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் இத்தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் தெரிவித்தனர்.
அல்-பைக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி ஹமாஸ் அமைப்பும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
காசா நகரத்தின் ‘நஸ்ர்’ (Nasr) பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது விடியற்காலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த மற்றொரு நபரும் உயிரிழந்ததாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் மீண்டும் ஆயுதங்களைச் சேகரித்துத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டும் இஸ்ரேல், சமீபத்திய வாரங்களில் அவ்வமைப்பிற்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் ஹமாஸின் மூத்த தளபதிகள், அக்டோபர் 7, 2023 தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் இஸ்ரேலியப் பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்தவர்கள் உட்பட குறைந்தது 20 ஹமாஸ் முக்கியப் புள்ளிகளைக் கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவிக்கிறது.
அக்டோபர் 2023-இல் தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான போராளிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதல்களில் இதுவரை 73,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




