எந்தவொரு தாக்குதலுக்கும் தயார்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
“பயங்கரவாதத்திற்கு எதிரான எந்தவொரு தாக்குதலையும் நடத்த இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது” என பாகிஸ்தானுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் நொய்டா நகரில் நேற்று தனியார் செய்தி நிறுவனம் சார்பில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தமது உரையில் கூறியவை வருமாறு,
“இந்தியா அமைதியை விரும்புகிறது, ஒருபோதும் போரை விரும்பியதில்லை. உலகின் எந்தவொரு நாட்டின் நிலத்தையும் கைப்பற்றவோ அல்லது யாரையும் அச்சுறுத்தவோ இந்தியா விரும்பவில்லை. அதேசமயம், அமைதிக்கும் கோழைத்தனத்திற்கும் வித்தியாசம் உள்ளது.
இந்தியா பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்ட ஒரு நாடு. ஆனால், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு ஏதேனும் ஒரு நாடு அடைக்கலம் அளித்தால், அத்துடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடும்.
எங்கள் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகக் கடைப்பிடித்து வரும் வரை, அதற்கு எதிராக எந்தவிதமான தாக்குதலையும் நடத்த இந்தியா தயார் நிலையில் உள்ளது. இந்தச் செய்தியை எங்கள் அண்டை நாட்டிற்கும் உலகிற்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்தியா சர்வதேச ஒத்துழைப்பை விரும்புகிறது; ஆனால் அது தேசிய நலன்களை விட்டுக்கொடுத்து அல்ல. இந்தியா உலகளாவிய நிலைத்தன்மையை விரும்புகிறது; ஆனால் தனது தன்னாட்சியை இழந்து அல்ல.
எங்கள் கொள்கை மிகவும் தெளிவானது. இந்தியா அமைதியை ஆதரிக்கும் நாடு, அதேநேரத்தில் தனது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்யாது.
பொதுவாக ஒரு நாடு எழுச்சி பெறும்போது, ஏற்கனவே வலிமையாக உள்ள நாடுகளுடன் மோதல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். மாற்றத்தை விரும்பும் சக்திகளுக்கும், தற்போதைய நிலையைத் தக்கவைக்க விரும்பும் சக்திகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாக மோதல்கள் நிகழ்ந்துள்ளன.
ஆனால், இந்தியாவுக்கு இந்த அணுகுமுறை பொருந்தாது. ஏனெனில், இந்தியா தற்போதைய நிலையைப் பாதுகாக்கும் சக்தியும் அல்ல; மாற்றத்தைத் திணிக்கும் சக்தியும் அல்ல. இந்தியா ஒரு நாகரிக சக்தி” என்று ராஜ்நாத் சிங் பேசினார்.




