இந்தியா செய்தி

சீனாவின் பிடிக்குள் இந்திய உற்பத்தித்துறை? அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க அறிக்கை

சீனாவின் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தித் தேவைகளுக்கு இடையில் சமநிலையைப் பேணி வருவதாக அமெரிக்க – சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணைக்குழு (USCC) தெரிவித்துள்ளது.

சீனாவின் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தித் தேவைகளுக்கு இடையில் சமநிலையைப் பேணி வருவதாக அமெரிக்க – சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணைக்குழு (USCC) தெரிவித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸின் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா தனது இராணுவத்தை நவீனமயப்படுத்தி வருவதுடன், உள்நாட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், முக்கியமான துறைகளில் சீனாவின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சீன முதலீடுகள் மற்றும் உபகரணங்கள் மீதான சில கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சீனாவிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை மட்டுப்படுத்துவதால் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் தொழில்துறை விரிவாக்கம் இன்னமும் சீன இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவைச் சார்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் விளங்கும் இந்தியா, அணு ஆயுத வல்லமை கொண்ட நாடு என்பதுடன், மிகப்பெரிய இராணுவங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

சீனாவுடன் சுமார் 2,100 மைல் நீள சர்ச்சைக்குரிய எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, இந்து சமுத்திரத்தின் முக்கிய கடல் வழிப் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், சீனாவுடனான நீண்டகால போட்டியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய நாடாக இருப்பதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சீனாவின் முக்கிய அழுத்தக் கருவியாக பொருளாதார ஆதிக்கம் விளங்குவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் மின்னணு உற்பத்தியைப் பாதிக்கும் வகையில் முக்கிய உதிரிப்பாகங்கள் மற்றும் உபகரணங்களின் ஏற்றுமதியை சீனா கட்டுப்படுத்தியுள்ளதாகவும், பொறியியலாளர்களை மீள அழைத்ததன் மூலம் உற்பத்தித் துறையில் தடைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் புதிய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் போட்டித்திறனை பாதிக்கும் வகையில் சீன நிறுவனங்கள் சில மருந்து மூலப்பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாகவும், தூய்மையான எரிசக்தித் துறையின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் மின்கல தொழில்நுட்ப ஏற்றுமதிகளிலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு சீனா, அமெரிக்காவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை, சீனப் பொருட்களைப் பயன்படுத்தும் இந்திய நிறுவனங்களிடம் கோரியதாகவும், பின்னர் அமெரிக்க – சீன வர்த்தக இணக்கப்பாட்டின் ஒரு பகுதியாக அந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்க விநியோகச் சங்கிலிகளையும் பாதிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளதாக ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவது ஆசியாவில் சாதகமான அதிகாரச் சமநிலையை உருவாக்குவதுடன், சீன உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு மாற்றாக இந்தியாவை உருவாக்க உதவும் என அமெரிக்கா கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சீனாவுடனான இந்தியாவின் போட்டி அதன் சொந்த தேசிய மற்றும் மூலோபாய நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், அமெரிக்காவின் இலக்குகளுடன் இந்தியா தானாகவே இணைந்து செயற்படும் என எதிர்பார்க்க முடியாது என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகள் கடந்த 25 ஆண்டுகளில் வலுப்பெற்றுள்ளன. 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பு, இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள், குறைக்கடத்திகள் முதல் உயிரித் தொழில்நுட்பம் வரையிலான ஒத்துழைப்புகள் மற்றும் குவாட் (QUAD) அமைப்பின் மீள்பலப்படுத்தல் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இருப்பினும், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பழைய கொள்கைகள், இரு நாடுகளின் ஒத்துழைப்புத் திட்டங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதாகவும், கூட்டாண்மையின் நோக்கங்களுக்கும் நடைமுறைச் சாத்தியங்களுக்கும் இடையில் இடைவெளியை உருவாக்குவதாகவும் அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி