தமிழக அரசியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராக பதவியேற்பதற்கு விஜய் தயாராகி வருகின்றார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளை வென்றுள்ளது.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு 118 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.
விஜய் இரட்டை தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அக்கட்சியில் இருந்து ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட வேண்டும்.
எனவே, தவெக வசம் 106 ஆசனங்கள் இருக்கும். எனவே, ஆட்சி அமைப்பதற்குரிய உரிமை கோருவதற்கு மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இதனால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது.
ஆளும்கட்சியான திமுக இந்த தேர்தலில் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ள போதும், திமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
திமுக கூட்டணியில், திமுக 56 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், தேமுதிக 1 தொகுதியிலும், ஏனைய கட்சிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளன.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
சீமானுக்கு பின்னடைவு!
காரைக்குடியில் போட்டியிட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
நடிப்பில் இருந்து அரசியலுக்கு மாறி, தவெக கட்சியைத் தொடங்கிய விஜய், களம்கண்ட முதல் தேர்தலிலேயே எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
தனிப்பெரும் கட்சியான தவெக
இந்த சூழலில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, தொடக்கம் முதலே தவெகவினர் முன்னிலை பெற்று வந்தனர். 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாகவும் தவெக உருவெடுத்துள்ளது.
இதை தொடர்ந்து, தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்க உள்ளார்.
பெரும்பாலும் எளிய பின்னணி கொண்ட தவெக வேட்பாளர்கள், பாரம்பரியமிக்க திராவிடக் கட்சி வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளனர்.இது பெரும் அரசியல் புரட்சியாக பார்க்கப்படுகின்றது.




