மக்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கமாட்டோம்: ஜனாதிபதி அநுர உறுதி
அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்நாட்டை வளர்ச்சியடைந்த, சிறந்த நாடாக கட்டியெழுப்புவதில் வேறு எந்த சக்தியையும் விட மக்கள் சக்தி மீது பலமான நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பொது மக்கள் மத்தியில் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும், நீதி வழங்கலை செயற்திறனாக மேற்கொள்வதையே எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
” எந்தவொரு வகையிலான இனவாதத்திற்கோ அல்லது மதவாத மோதல்களுக்கோ மீண்டும் இந்த இலங்கையில் இடமளிக்க மாட்டோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நமது அரசு, நமது நாட்டின் அமைவிடம், நமது நாட்டின் மனித வளத்தின் திறமைகள், நமது நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட நாகரிகம், நமக்குக் கிடைத்திருக்கும் மதிப்புமிக்க இயற்கை வளங்கள், மற்றும் உலகின் எந்தவொரு வளர்ந்த சமூகத்துடனும் தோளோடு தோள் நின்று பணியாற்றக்கூடிய திறமையான மனித வளம் ஆகியவை நம்மிடம் உள்ளன.
ஒரு நாடு முன்னேற்றமடைவதற்கு, அந்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை உரிமையாக்கித் தருவதற்கும் தேவையான காரணிகள் பெருமளவில் நமது நாட்டில் நிறைந்துள்ளன. இருப்பினும், அந்த முன்னேற்றகரமான அரசை அடைவதற்கு நமக்கு இன்னும் இயலாமல் உள்ளது.
சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலாய் ஆகிய அனைத்து மக்களின் சமத்துவ உரிமைகள் மீது , இனவாதத்தையும் மத தீவிரவாதத்தையும் நிராகரிக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவது நமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஓர் அஸ்திவாரமாகும்.அது ஒரு முக்கியமான அஸ்திவாரம்.
நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு, ஒருவரையொருவர் சந்தேகத்துடனும், வெறுப்புடனும், குரோதத்துடனும் செயற்படுவதால் நாடு முன்னேற்றமடையாது. எனவே முதல் அடித்தளத்தின் முதல் தூண் தேசிய நல்லிணக்கமாகும் ” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.




