ஐரோப்பாவின் பாதுகாப்பை பொறுப்பேற்கவும்: நேட்டோ நாடுகளுக்கு பென்டகன் அழுத்தம்
வாஷிங்டன் தனது கவனத்தை தனது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சவால்கள் பக்கம் திருப்புவதால், ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என்று நேட்டோ (NATO) அமைப்பிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு பென்டகன் வியாழக்கிழமை அழுத்தம் கொடுத்துள்ளது.
ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா ஏற்கனவே தொடங்கியுள்ளது. தற்போதும் அங்கு சுமார் 80,000 வீரா்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் இந்தப் படைக்குறைப்பை எந்த அளவிற்கு ஆழமாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் பென்டகன் ஆய்வு ஒன்றை முன்னெடுத்துள்ளது.
ரஷ்யா போன்ற எதிரி நாடுகளை ஐரோப்பாவில் அச்சுறுத்தித் தடுக்கும் நேட்டோவின் திறனுக்கு வலிமையான அமெரிக்கப் பிரசன்னமே முக்கிய காரணியாக உள்ளது.
நேட்டோ அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஐரோப்பிய நட்பு நாடுகளும் கனடாவும் எவ்வளவு திறம்படப் பதிலளிக்கின்றன என்பதைப் பொறுத்தே இந்தப் படைக்குறைப்புகள் அமையும்.
இந்த மறுசீரமைப்பின் மூலம் ஐரோப்பாவின் மரபுசார்ந்த பாதுகாப்பை அவையே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டிவரும். தேவைப்பட்டால் மட்டுமே, அணுஆயுதங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆதரவை அமெரிக்கா வழங்கும்.
பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்திற்குப் பிறகு, அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் துணையமைச்சர் எல்பிரிட்ஜ் கோல்பி (Elbridge Colby), ஜெர்மனி, போலந்து மற்றும் ஸ்பாண்டிநேவிய நாடுகளின் முயற்சிகளைப் பாராட்டினார்.
எனினும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரித்தானியா (UK) போன்ற நாடுகளிடம் இருந்து மேலும் பல நடவடிக்கைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
வாஷிங்டனின் நோக்கம் “நேட்டோவை நடைமுறைக்குச் சாத்தியமான, தற்போதைய காலத்திற்குப் பொருத்தமான, சீரான கட்டமைப்பிற்கு கொண்டு வருவதே ஆகும்.
அந்த அடிப்படையிலேயே நாங்கள் ஐரோப்பியப் பாதுகாப்புக் கொள்கை ஆய்வைத் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்றும் கோல்பி கூறினார்.
அமெரிக்காவின் இந்த இலக்குகளை நட்பு நாடுகள் எவ்வாறு பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளன என்பது குறித்து எழுத்துப்பூர்வமான பதில்களைக் கோரும் கருத்துக்கணிப்புப் படிவம் ஒன்றை பென்டகன் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.
“நாங்கள் சில கருத்துக்கணிப்புப் பதில்களைப் பெற்றுள்ளோம், அவற்றை மதிப்பாய்வு செய்ய எதிர்பார்க்கிறோம்” என்று கூறிய கோல்பி, எந்தெந்த நாடுகள் பதிலளித்துள்ளன என்பதைக் குறிப்பிடவில்லை.
அமெரிக்கப் படைகள் நட்பு நாடுகளின் இராணுவத் தளங்களையும் வான்வெளியையும் எவ்விதத் தடையுமின்றிப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுமா என்பது போன்ற, நேட்டோ அமைப்புடன் நேரடியாகத் தொடர்பில்லாத தகவல்களையும் இந்தக் கருத்துக்கணிப்பு கோரியுள்ளது.
அமெரிக்கா தம்மிடம் கலந்தாலோசிக்காமல் ஈரான் மீது போரைத் தொடங்கியபோது ஐரோப்பிய நாடுகள் சில தயக்கம் காட்டின.
“ஈரான் அணுஆயுதம் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதில் ஐரோப்பாவிற்கும் ஆர்வம் உள்ளது, அதுவே நிச்சயமாக எங்களின் நோக்கமும் கூட” என்று கூறிய கோல்பி, “நாங்கள் திறம்படச் செயல்படும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும். அதற்குத் தீர்க்கமான கணிப்புத்தன்மை நமக்குத் தேவை” என்றும் சுட்டிக்காட்டினார்.




