நவீனமயப்படுத்தப்படும் யாழ்.கொழும்புத்துறை இறங்குதுறை குறித்து அமைச்சர் ஆராய்வு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.
கடற்றொழிலாளர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, இறங்குதுறை வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்கால கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்தார். இத்திட்டத்திற்காக ரூ.205 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ள போதிலும், திட்டமிட்ட கால அட்டவணையை விட பணிகள் சற்று தாமதமடைந்துள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைசார் தரப்பினரின் நலன்களை கருத்திற்கொண்டு, எஞ்சியுள்ள பணிகளை துரிதப்படுத்தி அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும், இறங்குதுறையை அகலப்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக அமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அமைச்சரும் அதிகாரிகளும் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கொழும்புத்துறை இறங்குதுறையின் வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் கடற்றொழிலாளர்களின் தொழில்சார் தேவைகளை இலகுவாக்குவதுடன், அவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேலும் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.




