மாறி மாறி தாக்கிக்கொண்ட உக்ரைன், ரஷ்யா!! 600 ட்ரோன்கள், 90 ஏவுகணைகள் பயன்பாடு!
கீவ் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலில் ரஷ்யா அதிவேக ஒரெஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 83 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் குடியிருப்புப் பகுதிகள், அரசு கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்குக் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மோதலில் ஒரெஷ்னிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனிய இராணுவ மற்றும் தொழில்துறை இலக்குகளுக்கு எதிராக மற்ற வகை ஏவுகணைகளுடன் இதுவும் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளது.
மேலும், ரஷ்ய எல்லைக்குள் உள்ள பொதுமக்கள் வசதிகள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
இந்த விரிவான தாக்குதலில் 600 தாக்குதல் ட்ரோன்களும், 90 வான், கடல் மற்றும் தரைவழி ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் உக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புகள் 549 ட்ரோன்களையும் 55 ஏவுகணைகளையும் வெற்றிகரமாக அழித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளன.
அதேவேளை உக்ரேனிடம் மேம்பட்ட வான் பாதுகாப்புத் திறன்கள் மிகக் குறைவாக இருப்பதை இந்த தாக்குதல்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




