துருக்கியை வெளியேற்றியது பராகுவே:புதிய விதியின்கீழ் முதலாவது சிவப்பு அட்டை
முதல் பாதியிலேயே முன்னணி வீரர் வெளி யேற்றப்பட்ட போதிலும், பராகுவே அணி தனது அசாத்தியமான தடுப்பாட்டத்தின் மூலம் துருக்கியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றியுள்ளது.
இப்போட்டியில் அடிக்கப்பட்ட ஆட்டத்தின் அதிவேக கோலே இரு அணிகளுக்குமான வெற்றி-தோல்வியைத் தீர்மானித்தது.
அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 4-1 என படுதோல்வி அடைந்திருந்த பராகுவே , நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த போட்டியில் ஆக்ரோஷமாக களம் இறங்கியது.
ஆட்டம் தொடங்கிய 64-வது வினாடியிலேயே பராகுவேயின் மத்தியாஸ் கலார்சா (Matias Galarza) 25 மீட்டர் தூரத்திலிருந்து அடித்த ‘ராக்கெட்’ வேக லோ-ஷாட் (Low Rocket) கோலாக மாறியது.
இதன் மூலம், மொராக்கோ – ஸ்காட்லாந்து போட்டியில் இஸ்மாயில் சைபாரி 71-வது வினாடியில் அடித்திருந்த சாதனையை முறியடித்து, இந்த உலகக் கோப்பையின் அதிவேக கோலாக இது பதிவாகியுள்ளது.
ஆட்டத்தின் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில், பராகுவே அணியின் நட்சத்திர வீரர் மிகுவல் அல்மிரோன் (Miguel Almiron), துருக்கி வீரர் மெர்ட் முல்டுரிடம் தனது வாயைக் கையால் மூடிக்கொண்டு ஏதோ பேசினார்.
கால்பந்து விளையாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதியின்படி, எதிரெதிர் மோதல் சூழல்களில் வீரர்கள் தங்கள் வாய், கை அல்லது சட்டையால் வாயை மூடிக்கொண்டு பேசினால் அவர்களுக்கு நேரடியாகச் ‘சிவப்பு அட்டை’ (Red Card) வழங்கப்படும்.
பென்பிகா வீரர் கியான்லுகா ப்ரெஸ்டியானி, ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியரை வாயை மூடி இனரீதியாக இழிவுபடுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்தே இந்த விதி அமலுக்கு வந்தது.
இதன்படி, நடுவர் அல்மிரோனுக்கு சிவப்பு அட்டை காட்ட, VAR (Video Assistant Referee) அதனை உறுதி செய்தது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்த விதியின் கீழ் ஒரு வீரர் வெளியேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.




