ஈரானுடன் இன்று பேச்சு: ட்ரம்ப் தகவல்
ஈரான் மீதான பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுடான புதிய பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை (இன்று) தொடங்கும் என்று கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை Air Force On விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாக்குதல் தீவிரமடைவதை அவர்கள் பார்த்ததால், அதன் பரிமாணத்தை அறிந்துகொண்டனர். நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை வடிவில் அவர்களிடம் உரையாடி வருகிறோம். இது நாளை பிற்பகல் தொடங்குகிறது” என்று கூறினார்.
முன்னதாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், ஒப்பந்தத்திற்கான “அடிப்படை எல்லைகள்” ஒப்புக்கொள்ளப்பட்டதால், தாக்குதல்களை “நிறுத்தி வைக்குமாறு” ஈரானும் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகளும் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்பின் இந்தக் கூற்றுக்கு ஈரான் இன்னும் நேரடிப் பதில் அளிக்கவில்லை. போரை ஒப்பந்தம் மூலம் முடிவுக்குக் கொண்டுவரும் தருணம் நெருங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் பலமுறை கூறியபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பரத் தாக்குதல்கள் மீண்டும் தொடர்வது வழக்கமாக உள்ளது.
விமானத்தில் பேசிய டிரம்ப், தெஹ்ரானுடன் (ஈரான்) ஒப்பந்தம் செய்வதற்கான கெடு எதையும் குறிப்பிட மறுத்துவிட்டார். மேலும், “நிலைமை எப்படிச் செல்கிறது என்று பார்ப்போம். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கையில் இறங்கத் தயாராகவே இருக்கிறோம்… மனிதர்களைக் கொல்வது எனது நோக்கமல்ல” என்றும் சேர்த்துக் கூறினார்.




