தண்ணீரென நினைத்து ரயாசனத்தை பருகிய சிறுமி பலி: இலங்கையில் சோகம்
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற 3 வயது சிறுமி, தண்ணீர் என நினைத்து அவ்வீட்டில் இருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ (Hydrogen Peroxide) என்ற இரசாயனத்தை பருகியதால் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர்.
அவ்வேளை உறவினர்கள் வீட்டின் முன்றலில் ஒன்றுகூடியிருந்தபோது சிறுமிக்கு தாகம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, வீட்டின் ஜன்னல் படியில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து அச்சிறுமி பருகியுள்ளார்.
சிறுமியை உடனடியாகக் கம்பளை மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சிறுமி குறித்த திரவத்தை நீர் என நினைத்துக் குடித்தமையாலேயே இந்த மரணம் நேர்ந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையில் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.




