2027 ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டை குறைக்க இலக்கு
2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நேஷனல் சிஸ்டம் கண்ட்ரோல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் பேட்டரிகள் மூலம் சுமார் 750 மெகாவாட் மின்சாரத் திறனைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் டீசல் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்றும் அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரதீப் பிரியதர்ஷன கூறினார்.
இது தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், மின்சார உற்பத்திக்கான பேட்டரிகள் ஏற்கனவே மின் அமைப்புடன் இணைக்கப்பட்டு வருவதாகவும், 160 மெகாவாட் திறன் ஏற்கனவே நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, அந்த பேட்டரிகள் நிறுவப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 250 மெகாவாட் திறனுக்கான தனியார் துறை முதலீட்டைப் பெறுவதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்றும், இந்தத் திறனும் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் மின் அமைப்பில் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் மின்சாரப் பரிமாற்ற நிறுவனம் மூலம் 100 மெகாவாட் திறனை வழங்குவதற்கும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், 150 மெகாவாட் திறன் கொண்ட தரைவழி சூரிய மின் நிலையங்களில் பேட்டரிகளை நிறுவுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காரணிகளின் அடிப்படையில், 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள், பேட்டரிகள் மூலம் உருவாக்கப்படும் 750 மெகாவாட் திறன் தேசிய மின்சார அமைப்பில் சேர்க்கப்படும் என்றும், இது டீசல் பயன்பாட்டைக் குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.





