10 நாட்கள் ஓய்வில்லாப் பணி: ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிரோடு விளையாடுகிறதா விமானத்துறை?
சிட்னி விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் இரு Qantas விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் ஆபத்திலிருந்து மயிரிழையில் தப்பின.
இந்தச் சம்பவத்தின் போது பணியில் இருந்த பல விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டாளர்கள் (Air traffic controllers) கடுமையான உடல் மற்றும் மனச் சோர்வில் (Fatigue) இருந்தமை Reuters செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்துள்ள உள்கட்டமைப்புப் பதிவுகள் மற்றும் உரையாடல் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலைமையை “சற்றுப் பைத்தியக்காரத்தனமானது” என அப்போதைய பணிப் பொறுப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 27 அன்று, தரையிறங்க வந்த Qantas நிறுவனத்தின் ‘டர்போப்ராப்’ (Turboprop) ரக விமானம் ஒன்று, ஓடுபாதையைக் கடக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த அதே நிறுவனத்தின் ‘போயிங் 737’ ரக விமானத்தின் மீது மோதாமல் நூலிழையில் தப்பியது.
சிட்னி விமான நிலையத்தில் ஒரே மாதத்தில் இடம்பெற்ற ஆறு விபத்துத் தவிர்க்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவங்களில் இது முதலாவதாகும்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஊழியர் பற்றாக்குறைக்கு மத்தியில், இது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பணிகளின் பாதுகாப்பு குறித்த தீவிரக் கவலைகளை உருவாக்கியுள்ளது.
சம்பவம் நடந்த போது பணியில் இருந்த 10 கட்டுப்பாட்டாளர்களில் ஐந்து பேர், ஆஸ்திரேலியாவின் சோர்வு மேலாண்மை அமைப்பின் (Fatigue-management system) கீழ் “அதிக சோர்வு அபாயம்” (High risk – ‘H’) பிரிவில் வரிசைப்படுத்தப்பட்டிருந்ததாக உள்கட்டமைப்புப் பதிவுகள் காட்டுகின்றன.
ஒருவருக்கு “மத்திய அபாயம்” (Medium risk – ‘M’) என்றும், மற்றொருவருக்கு “குறைந்த அபாயம்” (Low risk – ‘L’) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எஞ்சிய மூவர் மட்டுமே சோர்வு அபாயப் பிரிவில் இல்லை.
“இன்று காலையில் ஐந்து பேர் ‘அதிக சோர்வு’ நிலையில் பணியில் உள்ளனர். இது சற்றுப் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது” என விபத்துத் தவிர்க்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு நிர்வாக இயக்குநரிடம் பேசிய பணிப் பொறுப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நல்லவேளையாக விமானங்கள் மோதிக்கொள்ளவில்லை, ஆனால் மிக நெருக்கமாக வந்தன. மேலேயுள்ள அனைவரும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்” என்றும் அவர் பேசிய உரையாடலில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய மூன்று கட்டுப்பாட்டாளர்களில் இருவர் “அதிக சோர்வு” நிலையிலும், ஒருவர் “மத்தியம சோர்வு” நிலையிலும் இருந்ததாக அந்தப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள விமான போக்குவரத்து அதிகாரிகள், போதிய ஊழியர்கள் இன்றி அதிக பணிச்சுமையுடன் இயங்கும் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அதனால் ஏற்படும் விபத்து அபாயங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தி வரும் சூழலில், இந்தத் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறி, ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ‘நிறுவனமான எயர்சர்வீசஸ் ஆஸ்திரேலியா’ (Airservices Australia) கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
அதேவேளை, ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (ATSB) இந்த ஆறு சம்பவங்கள் குறித்தும், அவற்றில் பொதுவான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்தும் விரிவான விசாரணைகளை நடத்தி வருகிறது.
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நீடிக்கும் கடுமையான ஊழியர் பற்றாக்குறை காரணமாக, கட்டுப்பாட்டாளர்கள் அதிகளவில் கூடுதல் நேரம் (Overtime) பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர்.




