எல் நினோ காலநிலையை எதிர்கொள்ள தயாராகிறது இலங்கை
எல் நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள் குழுவும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) பிற்பகல் கூடியது.
சமூக ரீதியாக நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய பெருந்தோட்டத்துறை, விவசாயம், வன ஜீவராசிகள் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளால் சமர்ப்பிக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு, மொணராகலை, அம்பாறை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ஊடாக மேற்கொள்வதற்கும், அந்த அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
வறட்சியான காலநிலை மேலும் நீடித்தால், நிலத்தடி நீர் மட்டம் குறைவடைதல் தொடர்பில் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், எல்நினோவின் புதிய நிலைமைகள் குறித்து ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
எல்நினோ நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிப்புக்குள்ளாகும் துறைகளுக்குத் தேவையான தீர்வுகளைத் தயாரிப்பது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.




