ஹவுதிகளுக்கு கடும் பதிலடி: சவூதி எச்சரிக்கை
சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவூதி அரேபியா எச்சரித்துள்ளது.
யேமனில் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளுடன் மீண்டும் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, யேமனின் செங்கடல் கடற்கரை மற்றும் பாப் அல்-மண்டப் (Bab al-Mandab) நீரிணைப் பகுதியை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், பாப் அல்-மண்டப் நீரிணைப் பகுதி சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இதன் கட்டுப்பாடு கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றிருப்பது, யேமன் அரசுப் படைகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளையும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் சவூதியின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது அவர்கள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தினர். இதன் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரைக் கடந்துள்ளது.
முன்னதாக, தெற்கு சவூதி அரேபியாவின் காமிஸ் முஷைத் பகுதியில் உள்ள ‘கிங் காலித்’ வான்படைத் தளத்தின் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பல டஜன் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்திப் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தினர்.
தினமும் பல மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்றப்படும் சவூதி அரேபியாவின் முக்கிய செங்கடல் எண்ணெய் துறைமுகமான யான்பு உட்பட ஆறு நகரங்களுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் சிவில் பாதுகாப்புத் துறை இன்று (செப். 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், “யான்பு, ஜெத்தா, அப்கா, ஜசான், அல் உலா, தாயிப் ஆகிய பகுதிகளில் ஆபத்து ஏதும் இல்லை; அபாயச் சூழல் விலகிவிட்டது. இருப்பினும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




