NPP ஆட்சியில் விரைவில் அமைச்சரவை மாற்றம்?
“அமைச்சரவையில் தற்போதைக்கு எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது. அதேபோல், வெளிவிவகார அமைச்சராக நான் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சராக நீங்கள் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதே, இது உண்மையா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து நாங்கள் தற்போதைக்குக் கவனம் செலுத்தவில்லை. அமைச்சர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தங்களது சுய அரசியல் லாபத்திற்காகவே இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
தற்போதைய வெளிவிவகார அமைச்சர் சிறப்பாகச் செயல்படுவதால்தான் இலங்கைக்குச் சர்வதேச அளவில் நல்ல அங்கீகாரம் கிடைத்து வருகின்றது. அத்துடன், நாட்டின் இராஜதந்திர மற்றும் தூதரக உறவுகளும் பெருமளவில் மேம்பட்டுள்ளன. எனவே, அவரை மாற்ற வேண்டிய எவ்விதத் தேவையும் தற்போதைக்கு இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.




