இரகசியங்களை மறைக்கும் சலே- அரசு எச்சரிக்கை!
“விசாரணை அதிகாரிகளை மாற்றுமாறு சந்தேகநபர் கோருவது ஏற்புடையது அல்ல. இரகசியங்களை மறைக்காமல் சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது சுரேஷ் சலே Suresh Saleh தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“சுரேஷ் சலே புலனாய்வு அதிகாரியாக, இராணுவ அதிகாரியாக இருந்தவர். எனவே, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். விசாரணையாளர்களை மாற்றுமாறு கோரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல.
இறந்தாலும் பரவாயில்லை இரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என குழுவொன்று கருத்து வெளியிடுகின்றது. கூடாரம் அமைத்து நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. சிலர் கைது செய்யப்படுவதை தடுக்க நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
எனவே, விசாரணையால் யார், யார் குழப்பம் அடைந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
சந்தேக நபர்கள் கோரும், விசாரணை அதிகாரிகளை வழங்க முடியாது.
விருப்பமான வைத்தியர்கள், விருப்பமான சட்டத்தரணிகளை நாடுவதுபோல, சந்தேக நபர்கள் விருப்பமான விசாரணை அதிகாரிகளை கோருவது ஏற்புடையது அல்ல.” – என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.




