போலந்து மற்றும் உக்ரைனுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சி?
போலந்து மற்றும் உக்ரேனியர்களுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா முன்னெடுக்கும் நாசவேலைகளை எதிர்கொள்ள தயாராகி வருவதாக போலந்தின் சிறப்பு சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் டோமாஸ் சீமோனியாக் (omasz Siemoniak) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போலந்துக்கும் உக்ரேனுக்கும் இடையே ஏற்படக்கூடிய மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்குவதே ரஷ்யாவின் கனவாகவும், ரஷ்ய சேவைகளின் கனவாகவும் இருந்தது, இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரந்த அளவில், போலந்து மற்றும் பால்டிக் நாடுகளுக்கு எதிராக ரஷ்யா கலப்புத் தாக்குதல்களையோ அல்லது நேரடித் தாக்குதல்களையோ நடத்துவதற்கான ஆபத்து குறித்து மேற்கத்திய உளவு அமைப்புகள் கவலை கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவிடம் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கான ஆயுதக் கிடங்கு உள்ளது என்றும் தற்போது அவர்கள் அதை தயார் செய்து வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது போலந்து மக்களைப் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கிளர்ச்சியாளர்களின் பெயரை உக்ரேனிய இராணுவப் பிரிவுக்குச் சூட்டுவது தொடர்பாக போலந்து மற்றும் உக்ரைனுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் பலவீனமடைந்துள்ளன.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள ரஷ்யா முயல்வதாகவும், சில நாசவேலைகளை செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.




