முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை உருவாக்கி வரும் ரஷ்யா!
ரஷ்ய விஞ்ஞானிகள் முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை’ உருவாக்கி வருவதாகத் தெரியவந்துள்ளது.
AI தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மனிதர்கள் 150 வயதை எட்டுவது அநேகமாக சாத்தியம் எனக் கூறிய சில மாதங்களுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மேம்பாட்டுப் பணியை முதுமை மற்றும் மருத்துவ உயிரியல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சர் டெனிஸ் செகிரின்ஸ்கி (Denis Sekirinsky), தனது நாட்டு ஆராய்ச்சியாளர்கள், செல்களின் முதுமையைத் தூண்டும் RAGE [Receptor for Advanced Glycation Endproducts] மரபணுவைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் மரபணு சிகிச்சை மருந்தை உருவாக்கும் பாதையில் இருப்பதாகக் கூறினார்.
எவ்வாறாயினும் இதற்கான ஆதாரங்களை அவர் வழங்கவில்லை.
RAGE மரபணு என்பது ஒரு ஏற்பியாகும், அதன் செயல்பாடு செல்களின் முதுமையைத் தூண்டுகிறது. புதிய மருந்து இதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தி இளமையை தக்கவைத்திருக்கும்.
இந்தத் துறை மேம்பட்ட மரபணு தொழில்நுட்பங்களைச் சார்ந்துள்ளது மற்றும் முதுமைக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய வழிகளில் ஒன்றாக விளங்குகிறது.





