பிரித்தானியாவில் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் உருவாக வாய்ப்பு
ஜெர்மன் (Germany) நாட்டைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனமான E.ON, பிரித்தானியாவில் செயல்படும் தனது போட்டியாளர் ஓவோ எனர்ஜி (Ovo Energy) உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்தால், பிரித்தானியாவில் 9.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய எரிசக்தி நிறுவனமொன்று உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் E.ON நிறுவனத்துக்கு சுமார் 5.7 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஓவோ எனர்ஜிக்கு சுமார் 4 மில்லியன் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், விவாதங்கள் தொடர்வதாகவும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பிரான்ஸ் நாட்டின் EDF எனர்ஜி (EDF Energy) மற்றும் யூட்டிலிட்டி வேர்ஹவுஸ் (Utility Warehouse) போன்ற நிறுவனங்களும் ஓவோ எனர்ஜியுடன் இணைவதில் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இணைப்பு நடந்தால், வாடிக்கையாளர் சேவை மென்பொருள் அமைப்புகள் மற்றும் பிராண்ட் பெயர் தொடருமா என்பது உள்ளிட்ட பல விடயங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
ஓவோ எனர்ஜி சமீப காலமாக நிதி சிக்கல்கள் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதிய முதலீடுகள் மற்றும் கூட்டணிகள் மூலம் நிலையை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது.
எவ்வாறாயினும் E.ON மற்றும் ஓவோ எனர்ஜி இரு நிறுவனங்களும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.





