ஞாசனார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு ரத்து
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA) ஆகியவை முன்னாள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு முடிவை எதிர்த்துத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த,நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பான ஹோமாகம நீதவான் நீதிமன்ற விசாரணையின் போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, 2019 மே 23 அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பைத் தொடர்ந்து ஞானசார தேரர் வெலிக்கடை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்குள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டமைக்காக 2018 ஆகஸ்ட் மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஞானசார தேரருக்கு 19 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை 6 ஆண்டுகளில் அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்பின்னர், 2018 அக்டோபர் 5 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.




