கிளிநொச்சியில் 02 வயது சிறுமியை பணத்திற்கு விற்ற தாயும், கள்ளக்காதலனும் கைது
கிளிநொச்சியில் இரண்டு வயதுடைய பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தில் 15,000 ரூபாய் பெறுமதியான கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அந்தச் சிறுமியை விலைக்கு வாங்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி ஒருவரை அவரது தாயும் கள்ளக்காதலனும் இணைந்து கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தர்மபுரம் கிராம உத்தியோகத்தர் வழங்கிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சிறுமி தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நான்கு வயதில் மூத்த சகோதரி ஒருவரும் இருப்பதாகவும், அந்தச் சகோதரியும் அதே நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிக்கவே சிறுமியை விற்றதாகத் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறாயின் எதற்காக கைப்பேசி கொள்வனவு செய்யப்பட்டது என பொலிஸார் வினவியபோது, அதற்கு அவர்கள் பதிலளிக்க தவறியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட தாயும் அவரது கள்ளக்காதலனும் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடையவர்கள் ஆவர்.
குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் கட்டுநாயக்க, எவரியவத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் மூவரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.




