இஸ்ரேல் சுதந்திர தினத்தில் பங்கேற்று தீபமேற்றுமாறு மோடிக்கு அழைப்பு
இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபமேற்றுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், இந்திய விமானி ஸ்மித் மச்சாரையும் கவுரவிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் வீரத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பலமுறை பாராட்டி பேசியிருந்தார்.
இந்தச் சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் தீபம் ஏற்ற அவருக்கு அழைப்பு விடுத்தேன். அதோடு இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கும் தீபம் ஏற்ற அழைப்பு விடுத்திருக்கிறேன்.
எனது அழைப்புக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும் என்று மோடி உறுதி அளித்தார். இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும் அவர் உறுதியேற்றார். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.




