பிரித்தானியாவில் அமெரிக்க வான்படைத் தளத்திற்கு அருகே பயங்கரவாத சதி முறியடிப்பு: 5 பேர் கைது
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரித்தானியாவின் வான்படைத் தளத்திற்கு அருகே பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 12:45 மணியளவில், புளொசெஸ்டர்ஷையரில் (Gloucestershire) உள்ள RAF Fairford தளம் அருகே மூன்று சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் சென்று கொண்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
பயங்கரவாதச் சம்பவங்களை கையாண்டு வரும் லண்டன் மெட்ரோபாலிட்டன் பொலிஸார் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கைதைத் தொடர்ந்து, காலை 7 மணியளவில் அருகில் உள்ள குறைந்தது 85 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, புளொசெஸ்டர்ஷையர் பொலிஸார் இதை தீவிர அவசரச் சம்பவமாகப் பிரகடனம் செய்தனர்.
வெளியேற்றப்பட்ட வீடுகளின் குடியிருப்பாளர்கள் அருகில் உள்ள பொழுதுபோக்கு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், அவர்கள் அன்றைய இரவு முழுவதும் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது.
மெட்ரோபாலிட்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட தேசிய ஒருங்கிணைப்பாளரான துணை உதவி ஆணையர் விக்கி எவன்ஸ் (Vicki Evans) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நாங்கள் விசாரணையின் தொடக்கக் கட்டத்தில் உள்ளோம். ஐந்து ஆண்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்பார்க்கப்படுவது போலவே, சம்பவத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ள நாங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இராணுவத்தின் வெடிபொருள் அகற்றும் பிரிவினர் (EOD) வாகனங்களைச் சோதனையிட்டு வரும் நிலையில், அவ்வாகனங்களைச் சுற்றி 400 மீட்டர் சுற்றளவிற்குப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் உலாவரும் புகைப்படம் ஒன்றில், ஐந்து ஆண்கள் சட்டையின்றி விலங்கிடப்பட்டுக் கைது செய்யப்படுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தைப் புகைப்படத்தின் மூல ஆதாரத்தைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், அதன் புவியியல் இருப்பிடத்தைச் சரிபார்த்ததில் அது உண்மையானது எனத் தெரியவந்துள்ளதாக BBC Verify தெரிவித்துள்ளது.
30 ஆண்டுகளாக Whelford பகுதியில் வசித்து வரும் ஜூலியன் டட்ஸ்வரி (Julian Tudsbery) என்பவர் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிராமத்தில் மூன்று “சந்தேகத்திற்கிடமான வேன்களைக்” கண்டதாக மற்றொரு குடியிருவாசி தெரிவித்ததாகக் கூறினார்.
சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று வேன்களையும், முகமூடி அணிந்திருந்த ஆண்களின் குழுவையும் கண்ட பெண் ஒருவர் பொலிஸாரை எச்சரித்ததாகப் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விமானப்படையின் 501-வது போர் ஆதரவுப் பிரிவு மற்றும் 420-வது ஏர்பேஸ் ஸ்குவாட்ரனின் தலைமையகத்தைக் கொண்டுள்ள RAF தளத்தை ஒட்டியுள்ள வெல்போர்ட் பகுதியில், இங்கிலாந்தின் வெடிபொருள் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் அந்த நபர்கள் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டனர்.
பிரித்தானியாவின் ‘ஸ்கை நியூஸ்’ வெளியிட்ட வான்வழித் நேரலைத் காட்சிகளில், வெடிபொருள் அகற்றும் ரோபோ ஒன்று மூன்று வெள்ளை நிற டிரக்குகளுக்கு இடையே உலாவுவதைக் காண முடிந்தது.
இரண்டு வேன்களின் பின்புறக் கதவுகள் திறக்கப்பட்டிருந்தன, மேலும் பெரிய கருப்புப் பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது.
கைது செய்யப்பட்டவர்களின் குடியுரிமை குறித்துப் பொலிஸார் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
‘பயங்கரவாதச் சட்டம் 2000’-இன் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, நீட்டிப்பு விண்ணப்பம் எதுவுமின்றி, வழக்கமான 24 மணிநேர வரம்பைப் போலன்றி, குற்றச்சாட்டுகள் இன்றி 14 நாட்கள் வரை தடுத்து வைக்க முடியும்.
பின்னர் லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பிரித்தானியாவில் உள்ள அமெரிக்கர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களது தனிப்பட்ட பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டது.
பிரித்தானியப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), இந்தச் சம்பவம் பலருக்கு “மிகுந்த கவலையளிக்கும்” என்பதைத் தான் அறிவதாகக் கூறினார்.
பிரித்தானியாவிலும் பிற நாடுகளிலும் நடந்துள்ள தொடர்ச்சியான தீவைப்பு மற்றும் சீர்குலைவு முயற்சிகளுக்கு ஈரானுடன் தொடர்புடைய நபர்களே காரணம் என்றும், அவற்றில் பெரும்பாலானவை யூத சமூகத்தைக் இலக்காகக் கொண்டிருந்தன என்றும் பிரித்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
மத்திய கிழக்கில் மோதல்கள் தொடர்ந்தால், பிரித்தானியாவில் ஈரான் தனது தாக்குதல் இலக்குகளை விரிவுபடுத்தக்கூடும் என்று அவர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.
ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற விரோதப் போக்குடைய நாடுகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்த பதற்றம் பிரித்தானியாவில் அதிகரித்துள்ள நிலையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
2025 டிசம்பர் வரையிலான ஆறு மாதங்களில் ஈரான் உட்பட விரோதப் போக்குடைய நாடுகளின் செயல்பாடுகள் தொடர்பான தேசிய பாதுகாப்பு வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகச் சென்ற மார்ச் மாதம் அதிகாரிகள் தெரிவித்தனர்.




