இலங்கை செய்தி

வடக்கில் கடல்சார் சுற்றுலா சர்வதேச ஈர்ப்பை உருவாக்கும்

வடக்கு மாகாணத்தின் கடல்சார் வளங்களைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் புதிய முயற்சிகள், சர்வதேச அளவில் வடக்கு மாகாணத்தை நோக்கிச் சுற்றுலாவிகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் கடல்சார் வளங்களைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் புதிய முயற்சிகள், சர்வதேச அளவில் வடக்கு மாகாணத்தை நோக்கிச் சுற்றுலாவிகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

‘எல்லாளன் டூரிஸம்’ நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக, யாழ்ப்பாணக் குடாக்கடலின் இயற்கை அழகை இரசிப்பதற்கும் பல்வேறு கடல்சார் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குமான விசேட படகுச் சுற்றுலா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத கடல்சார் வளங்களைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளை நடைமுறையில் வெளிப்படுத்தி வரும் எல்லாளன் டூரிஸம் நிறுவனம், தனது சேவைகளை விரிவுபடுத்துவதற்கான கோரிக்கையையும் முன்வைத்துள்ளது. இம்முயற்சிகளை நேரடியாக அனுபவித்து ஆராயும் நோக்கில், ஆளுநர், பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பணியகப் பணிப்பாளர் ஆகியோர் பங்கேற்கும் வகையில் இந்த முன்னோடிப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுற்றுலா அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இது முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்தது என்று குறிப்பிட்டார். கடல்சார்ந்த பிரதேசத்தில் வாழ்ந்தாலும், இவ்வாறான அனுபவத்தை இதுவரை பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்த அவர், இத்தகைய முயற்சிகள் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

இதுவரை வடக்கு மாகாணத்தின் சுற்றுலா என்பது பெரும்பாலும் சுற்றுலாத்தலங்களைப் பார்வையிடுவதுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், சுற்றுலாவிகளைக் கவர்வதற்கு அதற்கு அப்பால் பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளை உருவாக்குவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு அவற்றை ஏனையவர்களுடனும் பகிர்ந்துகொள்வதன் மூலம், மேலும் பலரை வடக்கு மாகாணத்தின் கடல்சார் சுற்றுலா முயற்சிகளை நாடி வரத் தூண்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாசார் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான முதலீட்டு வாய்ப்புகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி வருவது மகிழ்ச்சியளிக்கின்றது என்று தெரிவித்த ஆளுநர், எமது மண்ணைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான முயற்சிகளைத் திறம்பட முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.

எல்லாளன் டூரிஸம் நிறுவனம், யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலைத் தனித்துவமான சுற்றுலா அனுபவமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. பாரம்பரிய மீன்பிடி அனுபவம், கடலட்டை வளர்ப்புப் பண்ணையைப் பார்வையிடுதல், பனானா படகுச் சவாரி, கடல்வாழ் உயிரினங்களை அவதானித்தல் மற்றும் கடல் சூழலில் உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களைச் சுற்றுலாவிகளுக்கு வழங்கி வருகின்றது.

இம்முயற்சிகளின் ஊடாக உள்ளூர் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, வடக்கு மாகாணத்தின் கடல்சார் வளங்களைப் பொறுப்புடனும் நிலையான முறையிலும் பயன்படுத்தி, சுற்றுலாத்துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதே தமது நோக்கம் என்று நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்தச் சுற்றுலாப் பயணத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி, கல்வி மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை